அவதாரம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இதையடுத்து இந்தியன், விருமாண்டி, மறுமலர்ச்சி, தீனா, புதுப்பேட்டை, வேட்டைக்காரன், என்ஜிகே, மகாமுனி போன்ற பல படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்தவர் பாலாசிங்.(வயது 67).
சில நாட்களுக்கு முன் காய்ச்சலில் அவதிப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வட பழனியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பாலாசிங்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
பாலாசிங் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
100 படங்களில் நடித்திருக்கும் பாலாசிங்கிற்கு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம்தான் 100வது படமாக அமைந்தது. இவருக்கு தங்கலீலா என்ற மனைவி, ஓசின், சிபின் என்ற மகள், மகன் உள்ளனர். பாலாசிங்கின் உடல் சொந்த ஊரான கன்னி யாகுமரி மாவட்டம் களியக்காவிளை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.