மராட்டிய சட்டசபை கூடியது.. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

by எஸ். எம். கணபதி, Nov 27, 2019, 11:26 AM IST
Share Tweet Whatsapp

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கழிந்த நிலையில், சட்டசபை இன்று முதல் முறையாக கூடியது. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டதால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்று கடந்த 23ம் தேதி மாலையில் சரத்பவார் அறிவித்தார்.
ஆனால், அது வரை அவருடன் இருந்த சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், நள்ளிரவில் பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் மறுநாள் காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதன்பின், சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டாக தொடர்ந்த வழக்கில், பட்நாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் ஒரேயொரு நாள் அவகாசம் கொடுத்தது. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்பதை பட்நாவிசும், அஜித்பவாரும் உணர்ந்தனர். முதலில் அஜித்பவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பட்நாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவரும் இன்று கவர்னரை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, நாளை மாலை 6.40 மணிக்கு மும்பை சிவாஜி பார்க்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்கவிருக்கிறார்.
இந்நிலையில், புதிய சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று காலை கூட்டியிருந்தார். அதில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் வரிசையாக பதவியேற்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கெலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நாளை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவியேற்ற பின்பு, அடுத்த வாரத்திற்குள் மீண்டும் சட்டசபை கூடும். அப்போது புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
கடந்த அக்.24ம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர்.


Leave a reply