கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம்(இஸ்ரோ), பூமி ஆராய்ச்சிக்காக கார்ட்டோசாட் என்று பெயரிடப்பட்ட முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை கார்ட்டோசாட் வரிசையில் 8 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
இந்நிலையில், 9-வது செயற்கைகோளாக கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட கார்ட்டோசாட் செயற்கைகோள்களை விட மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள் ஆகும். இதில், பூமியின் மேற்பரப்பை மிக துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுத்து அனுப்பும். நகர் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டதாகும்.
இந்த செயற்கைகோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது இந்த செயற்கைகோளை கடந்த 25ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டை இன்று (நவ.27) காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தினர். இந்த ராக்கெட்டின் மூலம், கார்ட்டோசாட்-3 மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் 13 நானோ(சிறிய) செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.
இது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கார்ட்டோ சாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களும் அதன் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்டன. இஸ்ரோவின் செயற்கைகோள் டீம் மற்றும் ராக்கெட் டீமுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார்.