பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டை இன்று (நவ.27) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தினர். இந்த ராக்கெட்டின் மூலம், கார்ட்டோசாட்-3 மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் 13 நானோ(சிறிய) செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கார்ட்டோ சாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களும் அதன் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்டன. இஸ்ரோவின் செயற்ைககோள் டீம் மற்றும் ராக்கெட் டீமுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்டோ சாட் செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நானோ செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
கார்டோ சாட் இ்ன்னும் மேம்படுத்தப்பட்ட படங்களை எடுத்து சிறந்த ஆராய்ச்சிக்கு உதவும். இஸ்ரோ மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.