காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று(நவ.27) தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி.(கறுப்பு பூனை படை) பாதுகாப்பு ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போல், மன்மோகன்சிங் உள்பட முன்னாள் பிரதமர்களுக்கும் இந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிரதமருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும் என்ற திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன் மீதான விவாதங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி முன்பு செய்ததது போல், நாங்கள் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதில்லை.
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பை மத்திய அரசு விலக்கி விட்டது போல, மக்களிடம் அனுதாப அலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது உண்மையில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை, நவீன பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் பாதுகாப்பு அதிகரிக்கவே செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.