இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு.. டெல்லியில் வைகோ கைது..

by எஸ். எம். கணபதி, Nov 28, 2019, 13:11 PM IST
Share Tweet Whatsapp

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து, நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடியின் சார்பில் அழைத்தார்.

இதை ஏற்ற கோத்தபய ராஜபக்சே, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இன்று மாலையில் டெல்லி வந்து சேரும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கு பின்னர், இலங்கை அதிபர் கோத்தபய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று காலை, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதிமுகவினர் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

READ MORE ABOUT :

Leave a reply