மகாராஷ்டிர சபாநாயகராக நானா படோலே தேர்வு.. போட்டியில் பாஜக விலகியது,.

by எஸ். எம். கணபதி, Dec 1, 2019, 12:46 PM IST
Share Tweet Whatsapp

 

மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவில் ஒரு மாத கால அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.

உத்தவ் தாக்கரே அரசு டிசம்பர் 2ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நேற்று(நவ30) சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில், கூட்டணியில் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, சரத்பவாரின் என்.சி.பி.க்கு துணை முதல்வர், துணை சபாநாயகர் பதவிகள், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி என்று பிரிக்கப்பட்டுள்ளதாக அஜித்பவார் கூறியிருக்கிறார். எனவே, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அஜித்பவார் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.

இதற்கிடையே, காங்கிரசின் சார்பில் சபாநாயகர் வேட்பாளராக நானா படோலே அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் முர்பாட் தொகுதி எம்.எல்.ஏ.வான கிஷான் கத்தோரே அறிவிக்கப்பட்டார்.  களம் இறக்கப்பட்டார். 2 வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு வாபஸ் பெற இன்று காலை 10 மணி வரை இறுதி காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷான் கத்தோரே இன்று காலை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, நானா படோலே சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் உத்தவ்தாக்கரே மற்றும் எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Leave a reply