மகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு

Uddhav govt wins trust vote, as bjp walks out.

Dec 1, 2019, 12:29 PM IST

மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மகாராஷ்டிராவில் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.

உத்தவ் தாக்கரே அரசு டிசம்பர் 2ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, நேற்று(நவ.30) மதியம் 2 மணிக்கு சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது.

தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள திலிப் வல்சே, சட்டசபையை நடத்தினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை என்.சி.பி கட்சி உறுப்பினர்கள் நவாப் மாலிக், ஜெயந்த் பாடீல், சிவசேனாவின் சுனில்பிரபு ஆகியோர் வழிமொழிந்தனர்.

அப்போது, பாஜக சட்டசபைக் குழு தலைவர் பட்நாவிஸ் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 105 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்நாவிஸ் கூறுகையில், அவையை தொடங்கும் முன்பு தேசிய கீதம் இசைக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக நாங்கள் நியமித்த காளிதாஸ் கொலம்ப்கரை மாற்றியது விதிகளுக்கு முரணானது. அதே போல், அமைச்சர்கள் பதவியேற்கும் போது சத்ரபதி சிவாஜி, அம்பேத்கார், புலே ஆகியோர் பெயர்களில் உறுதிமொழி எடுத்தது விதிகளுக்கு முரணானது. இதையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சபாநாயகர் திலிப் வல்சே குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அரசுக்கு ஆதரவாக 169 பேர் வாக்களித்தனர். மஜ்லிஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நவநிர்மாண் சேனா ஆகியவை வாக்கெடுப்பை புறக்கணித்தன. மொத்தம் உள்ள 288ல் 169 வாக்குகளை எடுத்து அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் வல்சே அறிவித்தார்.

உத்தவ் தாக்கரே அவையில் உறுப்பினராக இல்லாததால், அவர் வாக்களிக்கவில்லை. அவர் பேசுகையில், முதன்முதலாக சட்டசபைக்குள் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

மகாராஷ்டிர சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த நானா படோலேவும், பாஜக சார்பில் கிஷான் கத்தோரேவும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆளும்கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளதால் நானா படோலே வெற்றி பெறுவது உறுதி. புதிய சபாநாயகர் பொறுப்பேற்றதும், ஓரிரு நாளில் சட்டசபையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றுவார்.

You'r reading மகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை