மகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டணி முறிந்தது. அதற்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகி உள்ளார்.
இந்நிலையில், என்.சி.பி. கட்சித் தலைவர் சரத்பவார், மராத்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சிவசேனாவுடன், காங்கிரஸ் கைகோர்ப்பதில் ஏராளமான பிரச்னைகள் இருந்தன. இதனால், பேச்சுவார்த்தை இழுத்து கொண்டே சென்றது. இதில் மனம் நொந்து போயிருந்த அஜித்பவாருக்கு பட்நாவிஸ் அழைப்பு விடுக்கவே அவசரப்பட்டு அஜித்பவார் அங்கு போய் விட்டார். ஆனால், அஜித்பவாருக்கு உடனடியாக பதவியேற்க விருப்பம் இல்லை. சில நிர்ப்பந்தத்தில் அவர் பதவியேற்று விட்டார்.
அப்படி பாஜக பக்கம் சென்றது தவறு என்று அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்து விட்டார். அதனால், அவர் எப்போதும் போல் கட்சியில் செயல்படுவார். நான் டெல்லியில் இருக்கும் போதெல்லாம் அவர்தான் இங்கு கட்சியை பார்த்து கொள்வார். இப்போதும் கட்சிக்காரர்கள் தங்கள் பிரச்னைகளை அவரிடம் தீர்த்து கொள்வார்கள்.
நான் விவசாயிகள் பிரச்னைகளுக்காக பிரதமர் மோடியை சந்தித்த போது, அவர் பாஜகவுக்கு ஆதரவு கேட்டார். நான் விவசாயிகள் பிரச்னைகளை பற்றி பேசி விட்டு, கிளம்பும் போது அவர் என்னை திருப்பி அழைத்து பேசினார். அப்போது அவர், மகாராஷ்டிராவில் நாம் சேர்ந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும். நான் மகிழ்ச்சியடைவேன் என்று அழைத்தார். அதற்கு நான், நமது நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இனிமேலும் அதே போல் சிறந்த நட்பு நீடிக்கும். அதே சமயம், நான் அரசியல் ரீதியாக பாஜகவுடன் இணைந்து செயல்பட முடியாது. அதுக்கு எனக்கு சரிப்பட்டு வராது என்று தெரிவித்து விட்டு வந்தேன்.
இவ்வாறு சரத்பவார் கூறியிருக்கிறார்.