சூடானில் செராமிக் தொழிற்சாலையில் காஸ் டேங்கர் வெடித்த விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் இறந்துள்ளனர். 130 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் பண்ருட்டி வாலிபர் ராஜசேகர், தனது மனைவியுடன் வீடியோ போன் கால் மூலம் பேசிக் கொண்டிருக்கும் போது சம்பவம் நடந்துள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் பாகிரி நகரில் வடக்கு கார்டோம் என்ற பகுதியில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்த தொழிற்சாலையில் இந்திய நேரப்படி டிச.3ம் தேதி மதியம் ஒரு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பெரிய பெட்ரோலிய காஸ் டேங்கரில் இருந்து சிறிய சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது காஸ் லீக் ஆகி, டேங்கர் வெடித்தது. பயங்கரமான இந்த தீ விபத்தில் அங்கு பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்கள் சிக்கினர்.
இதில், 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மொத்தம் 25 பேர் உயிரிழந்த நிலையில் 130 பேர் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் அங்கு சென்று காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.
உயிரிழந்த தமிழர்களில் பண்ருட்டி இளைஞர் ராஜசேகரும்(35) ஒருவர். அவர் பண்ருட்டி மானடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன். ராஜசேகருக்கு கலைசுந்தரி என்ற மனைவியும், சிவானி(3) என்ற குழந்தையும் உண்டு. அந்த தொழிற்சாலையில் சம்பவம் நடந்த போது, ராஜசேகர் அங்கிருந்தபடியே அவரது மனைவி கலைசுந்தரியிடம் வீடியோ போன்கால் போட்டு பேசியிருக்கிறார். கணவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது பின்புறம் வானுயரத்திற்கு தீப்பிழம்பு ஏற்படுவதை கலைசுந்தரி கவனத்திருக்கிறார். அவர் அலறலுடன் கணவரை எச்சரிக்கும் போதே வீடியோ கால் கட் ஆகியிருக்கிறது.
அதன்பிறகு, ராஜசேகரின் சித்தப்பா திருநாவுக்கரசு, கடலூர் மாவட்டக் கலெக்டரை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். இதன்பிறகு, மத்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட மற்ற தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
சம்பவத்தை கேள்விப்பட்டு பிரதமர் மோடி, ந்த தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சூடான் தொழிற்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சில இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.