மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காயத்திற்கு பதில் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? என்று ப.சிதம்பரம் காட்டமாக கேட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு விடுதலையானார். திகார் சிறையில் இருந்து அவர் நேரடியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். தன்னை சிறையில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறினார்.
இன்று காலையில் சிதம்பரம், நாடாளுமன்றத்திற்கு வந்தார். வெங்காயம் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அதில் சிதம்பரமும் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் விடுதலையானதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்தாலும் நாடாளுமன்றத்தில் எனது குரலை மத்திய அரசால் அடக்க முடியாது. வெங்காயம் விலை உயர்வைப் பற்றி பேசினால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். வெங்காயத்திற்குப் பதில் அவர் என்ன சாப்பிடுகிறார்? வெண்ணெய் பழம் (பட்டர் புரூட்) சாப்பிடுகிறாரா? என்று கேட்டார்.