உத்தவ் முதல்வரான பின்பு மோடியுடன் முதல் சந்திப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 7, 2019, 09:30 AM IST
Share Tweet Whatsapp

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால், சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டதால் பிரச்னை ஏற்பட்டு, கூட்டணி முறிந்தது. அதன்பிறகு ஏற்பட்ட ஒரு மாத கால அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து, தற்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் போலீஸ் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். அவர் நேற்றிரவு லோகேகான் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ்தாக்கரே, பாஜக தலைவர் பட்நாவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமரை வரவேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வந்திருந்தார்.

பிரதமரை எந்த சலனமும் இல்லாமல் வரவேற்ற உத்தவ் தாக்கரே, விமான நிலைய ஓய்வறையில் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர், பிரதமர் மோடி, ராஜ்பவனுக்கு சென்றார். உத்தவ் தாக்கரேவும் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
பாஜகவையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வரான பிறகு நேற்றுதான் முதல் முறையாக அமித்ஷாவையும், மோடியையும் சந்தித்துள்ளார்.


Leave a reply