உன்னாவ் சம்பவத்தில் மரணம் அடைந்த இளம்பெண்ணின் உறவினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆறுதல் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை, கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இரண்டு பேரில் ஒருவா் தப்பி விட்டாா். மற்றொருவா் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பிறகு கடந்த வியாழன்று அந்தப் பெண், பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்துக்கு சென்றார். அவர் கவுரா சந்திப்பில் சென்றபோது, பலாத்கார குற்றவாளிகளான சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி மற்றும் அவர்களுடன் ஹரிசங்கர், உமேஷ் பாஜ்பாய், ராம்கிஷோர் ஆகிய 3 பேர் சேர்ந்து அங்குவந்து அவரை வழிமறித்து, பலாத்கார வழக்கில் சாட்சியளிக்கக் கூடாது என்று மிரட்டினர்.
அந்த பெண் மறுக்கவே அவர் மீது தீ வைத்து விட்டு தப்பினர். அந்த பெண் நேற்றிரவு 11.40 மணிக்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது உ.பி.யில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று காலை காரில் உன்னாவ் நகருக்கு சென்றார். அங்கு அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.