சுங்க கட்டணக் கொள்ளை.. கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்..

Dr.Ramadoss wrote letter to minister Nitin gadkari to take action on Toll Plaza

by எஸ். எம். கணபதி, Dec 7, 2019, 13:53 PM IST

தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கட்கரிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பல சுங்கச் சாலைகளில், அதை அமைப்பதற்கான முதலீடு எடுக்கப்பட்ட பிறகும், முழுமையான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்.எச்.45 தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரனூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இச்சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையிலான 13 ஆண்டுகள், ஆறு மாத காலத்தில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின், இப்போது வரை கூடுதலாக ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்டது. இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற வினாவுக்கு நெடுஞ்சாலைகள் ஆணையம் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்கான உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

விசாரணை முடிவடையும் வரை 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் பராமரிப்புக்காக 40 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணையிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading சுங்க கட்டணக் கொள்ளை.. கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை