மத்திய பாஜக அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பொம்மை அரசுதான் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி 105 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திருச்சி வழியாக காரைக்குடிக்கு சென்றார். திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. சீரழிவுகள் தினம்தோறும் வெளிப்படையாக தெரிகின்றன. பொருளாதார நிலையை சீர்படுத்த தகுதி படைத்த அரசாக மோடி அரசு இல்லை என்றும், நிர்மலா சீதாராமன் தகுதிபடைத்த நிதியமைச்சர் இல்லை என்றும் பல பொருளாதார நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். ஆனாலும், நிதியமைச்சரை பதவி விலகுமாறு நான் கோரப்போவதில்லை.
பொருளாதார சரிவின் உண்மை நிலையை மத்திய அரசு உணரவில்லை. அதே போல், நாட்டின் சமூக நல்லிணக்கம் குறைந்து போய் விட்டது. அமைதியற்ற சூழலை மத்திய அரசு உருவாக்கி விட்டது. பாஜக அரசுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்த மக்கள் தற்போது அந்த அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
பின்னர் காரைக்குடிக்கு சென்ற அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது ஆட்சியே நடைபெறவில்லை. மத்திய அரசின் பிடியில் சிக்கிய பொம்மை அரசுதான் உள்ளது. தெலங்கானா என்கவுன்டர் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டை சாதாரண மக்கள் அணுகுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதியே சுட்டிக் காட்டியுள்ளார். நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்தாலும், தெலங்கானா என்கவுன்டர் போன்ற சம்பவங்களை ஏற்க முடியாது என்றார்.