குடியுரிமை திருத்த மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்.. அதிமுக, பிஜேடி ஆதரவு

by எஸ். எம். கணபதி, Dec 10, 2019, 10:14 AM IST
Share Tweet Whatsapp

மக்களவையில் பலத்த எதிர்ப்புக்கிடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் அதிமுக, பிஜேடி கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவை, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (டிச.9)தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த மசோதா .001 சதவீதம் கூட சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். காங்கிரஸ்தான் மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தி விட்டதாகவும், அதனால்தான் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அகதிகளாக வருபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையே வேறுபடுத்தி பார்க்க வேண்டுமென்றார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மதரீதியிலான அடக்குமுறைகளை தொடா்ந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக குடிபெயா்ந்து இந்தியாவிற்கு வந்து வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் இதில் இடம் பெறவில்லை. இதுதான் அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

எனினும், மக்களவையில் 300க்கும் அதிகமான உறுப்பினர்களை ஆளும் பாஜக கொண்டிருப்பதால் பலத்த எதிர்ப்புக்கு இடையே இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய பாஜக அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஆதரிப்பது அல்லது வெளிநடப்பு செய்து மறைமுகமாக அந்த மசோதா வெற்றி பெறச் செய்வது என சில கட்சிகள் செயல்பட்டு வந்தன.

ஆனால், கடந்த ஜனவரியில் குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்த போது வெளிநடப்பு செய்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டி.ஆர்.எஸ்) கட்சியினர் இம்முறை எதிர்த்தனர். அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் நம்மா நாகேஸ்வரராவ் பேசுகையில், இந்த சட்டமசோதா, மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிறது. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்ட நாளை நவ.26ல் கொண்டாடிய மத்திய அரசு, இப்போது அந்த சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது என்றார்.

இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பிஜுஜனதா தளம்(பிஜேடி) 7 உறுப்பினர்களும் இந்த சட்டத்தை ஆதரிக்கின்றனர். பாஜகவுக்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 238 உறுப்பினர்களில் 120 எண்ணிக்கையை பெற்றுள்ளதால் அந்த அவையிலும் எளிதாக மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply