உள்ளாட்சி மறைமுக தேர்தல்.. திருமாவளவன் மனு தள்ளுபடி..

by எஸ். எம். கணபதி, Dec 10, 2019, 13:04 PM IST
Share Tweet Whatsapp

மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு போன்ற பிரச்னைகளால் ஏற்பட்ட வழக்குகள் காரணமாக தேர்தல் தடைபட்டது. தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச.27, 30 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர், துணை தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வார்டு கவுன்சிலர்களே இந்த பதவிகளுக்கு வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

இந்த அவசரச் சட்டம் மற்றும் அரசாணையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதை தள்ளுபடி செய்தனர். மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு ஜனநாயக நடைமுறைக்கு எதிரானதல்ல என்று அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.


Leave a reply