குடியுரிமை சட்ட திருத்த மசோதா... சிவசேனா எதிர்க்க முடிவு

by எஸ். எம். கணபதி, Dec 11, 2019, 09:42 AM IST
Share Tweet Whatsapp

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காவிட்டால் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் டிச.9ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் மசோதா எளிதாக நிறைவேறியது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் சிவசேனா, மக்களவையில் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இதை ஆதரிப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் அஸ்திவாரத்தை குலைப்பவர்கள் என்று விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், இந்த மசோதா மீது எந்த ஒரு குடிமகனுக்கு அச்சம் ஏற்பட்டாலும் அதை நாம் போக்க வேண்டியது அவசியம். இந்த சட்டத்தை ஆதரிக்காதவர்களை தேசத்துரோகிகள் என்று நோக்கம் கற்பிப்பதுதான் பாஜகவின் வேலை. ஏதோ பாஜக மட்டுமே நாட்டை பாதுகாப்பது போல் பேசுகிறார்கள். அந்த போக்கை மாற்ற வேண்டும். நாங்கள் இந்த மசோதாவில் சில திருத்தங்களை அளித்துள்ளோம். அதை நிறைவேற்றினால் மட்டுமே மாநிலங்களவையில் இதை ஆதரிப்போம். இல்லாவிட்டால் எதிர்த்து வாக்களிப்போம் என்றார். வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளித்தாலும் 25 ஆண்டுகளுக்கு வாக்குரிமை தரக் கூடாது, இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்த வேண்டும் என்று சிவசேனா நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா இன்று (டிச.11) மதியம் 2 மணிக்கு மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. பாஜகவுக்கு 83, ஜே.டி.யு. 6, அகாலிதளம் 3, எல்ஜேபி 1, ஆர்பிஐ 1 மற்றும் 11 நியமன உறுப்பினர்கள் என தே.ஜ.கூட்டணியின் 105 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது தவிர, அதிமுக 11, பிஜுஜனதா தளம் 7 தெலுங்குதேசம் 2, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 2 மற்றும் பாமக, நாகா மக்கள் முன்னணி, போடாலாந்து மக்கள் முன்னணி தலா 1 என்று மொத்தம் 128 உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜே.டி.யூ, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.


Leave a reply