சில எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014க்கு முன்பு இந்தியாவுக்குள் வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை தருவதற்கு இந்த மசோதா வழி வகை செய்கிறது.
முஸ்லிம்களை மட்டும் சேர்க்காதது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இந்த மசோதா பகல் 12 மணிக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசுகையில், மதரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்து குடியேறியவர்களுக்காக தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டதுதான் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இந்த மசோதாவை எதிர்க்கும் சில எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் குரலை ஒலிக்கின்றன என்றார்.
கூட்டத்திற்கு பின்னர், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு சென்று, வர்த்தகர்கள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து வந்து நிதியமைச்சரிடம் தெரிவிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.