குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள் எதிராக 105 வாக்குகள்... ராஜ்யசபாவிலும் நிறைவேறியது

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 08:55 AM IST

குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையிலும்(ராஜ்யசபா) நிறைவேறியது. ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 9ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகள் பெற்று எளிதாக நிறைவேறியது. எதிராக 80 வாக்குகளே கிடைத்தன.

மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று(டிச.11) பகல் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை தாக்கல் செய்து பேசினார். இதன் மீது 6 மணி நேரம் காரசாரமான விவாதம் நடந்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.

பின்பு, தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கோரும் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்திற்கு எதிராக 124 உறுப்பினர்களும், ஆதரவாக 99 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அதிமுக, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. திமுக எதிராக வாக்களித்தது.
அதில், மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 105 வாக்குகள் பதிவாகின. மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்த நாள் கறுப்பு நாள் காங்கிரஸ் விமர்சனம் செய்தது.


More India News