அயோத்தி நில வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. ராமர் கோயில் கட்டுவது உறுதி..

Ayodhya verdict is final. Supreme Court dismisses 18 review petitions

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 17:50 PM IST

அயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறொரு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு பரபரப்பான தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்பு வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதே சமயம், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த சித்திக் என்பவரின் வாரிசான மவுலானா சையத் ஆஷாத் ரஷீத், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஷப்னம் ஆஸ்மி, ஹபிப் ஹர்ஷ்மந்தர், பாராக் நக்வி, நந்தினி சுந்தர், ஜான் தயாள் உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 40 பேர் கையெழுத்திட்டு, அயோத்தி வழக்கில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அயோத்தி தீர்ப்பில் நிலப் பிரச்னையைத் தாண்டி 2 மத நம்பிக்கைகள் குறித்து தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக அமைந்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்த சீராய்வு மனுக்களை விசாரணைக்கு உகந்ததா என்று ஆய்வு செய்வதற்காக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில், 18 சீராய்வு மனுக்களையும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

You'r reading அயோத்தி நில வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. ராமர் கோயில் கட்டுவது உறுதி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை