தளபதி 64 படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 3வது கட்டமாக கர்நாடகாவில் உள்ள சிமோகா சிறையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஏற்கனவே முதல் கட்டமாக சென்னையிலும், 2ம் கட்டமாக டெல்லியிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் பூந்தமல்லி பார்வையாற்றோர் பள்ளியில் ஷூட்டிங் நடந்தபோது அங்கு படிக்கும் மாணவர்கள் விஜய்யுடன் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம். ஆனால் விஜய்க்கு இந்த விஷயம் தெரியப்படுத்தவில்லை.
படப்பிடிப்பு முடிந்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். மாணவர்கள் ஏமாற்றம் அடைந்ததுபற்றிய தகவலை அங்குள்ள ஆசிரியர் ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார். இந்த விஷயம் விஜய்க்கு தெரிந்தவுடன் வருத்தப்பட்டாராம். தற்போது கர்நாடகாவில் படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்ததும் அந்த பள்ளிக்கு வந்து மாணவர்களை சந்தித்து நீண்ட நேரம் அவர்களுடன் இருக்க எண்ணி உள்ளாராம்.
இதற்கிடையில் மற்றொரு வில்லங்கமும் விஜய் படத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பார்வையற்றோர் பள்ளியில் ஷூட்டிங் நடந்தபோது படப்பிடிப்பு வாகனங்களாலும், படக்குழுவினரின் கட்டுப்பாடுகளாலும் அங்கிருந்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி நல ஆணையர் அப்பள்ளியின் முதல்வரிடம் அறிக்கை கேட்டுள்ளாராம். இடையூறு ஏற்பட்டது உறுதியானால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.