குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு

Dissent grows in Assams ruling BJP-AGP govt, many leaders quit

by எஸ். எம். கணபதி, Dec 14, 2019, 11:52 AM IST

அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாக்கியுள்ளது. இதன்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்த சட்டம், முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டுகிறது என்று கூறி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது ஒருபுறமிருக்க, வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் இந்த சட்டத்திற்கு வேறு காரணத்தால் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதாவது, அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கினால், அது தங்கள் சொத்துக்களுக்கும், உரிமைகளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், அசாமில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், அசாமில் மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், வாகனங்களுக்கு தீ வைப்பு என்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அசாம் ஆளும் பாஜக- அசாம் கனபரிஷத் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி, போராட்டத்துக்கு ஆதரவாக கிளம்பியுள்ளனர். பாஜக மூத்த தலைவர் ஜெகதீஷ் புயான், இந்த சட்டம் அசாம் மக்களுக்கு எதிரானது. அதனால், நான் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளேன் என்று தெரிவித்து, கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அசாம் மொழி திரைப்பட நடிகர் ஜடின் போரா, தான் வகித்து வந்த அசாம் திரைப்பட நிதி மற்றும் வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுடன், பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். திரைப்படத் துறையைச் சேர்ந்த ரவிசர்மா விலகியுள்ளார். முன்னாள் சபாநாயகர் புலாகேஷ் பாரோவ், பாஜக எம்.எல்.ஏ. பத்மா ஹசாரியா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

தற்போதைய சபாநாயகர் ஜிதேந்திரநாத் கோஸ்வாமியும், இந்த சட்டம் வெவ்வேறு இனத்தவர்களிடம் வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாக அமைந்துள்ளது. இதில் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவுகள் மோசமாகலாம் என்று கூறியிருக்கிறார். மேலும், பாஜகவில் இருந்து விலகிய பலரும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள், பிரம்மபுத்ரா பள்ளதாக்கு பகுதியில்தான் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால், அங்கு இந்த சட்டத்திற்கு விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, அசாம் மக்களுக்கு இந்த சட்டம் எதிரானது என்கின்றனர். இதே போல், அசாம் கனபரிஷத் கட்சியிலும் ஏராளமானோர் அதிருப்தி அடைந்து விலகியுள்ளனர்.

You'r reading குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை