பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்களில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகனும் ஒருவர்.
பிரிட்டன்(இங்கிலாந்து) நாடாளுமன்றத்தில் பிரக்சிட் தீர்மானம் நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 15 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர். மொத்தம் 650 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் இம்முறை வெள்ளையர் அல்லாத இனத்தவர் 65 பேர் வென்றுள்ளனர். அவர்களில் 15 பேர் இந்தியர்கள்.
இங்கிலாந்தில் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இம்முறை 15 இந்தியர்கள் தேர்தலில் வெற்றி பெற்றது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர்களில் 7 பேர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள். மீதி 8 பேர் தொழிலாளர் கட்சி எம்.பி.க்களாகி உள்ளனர்.
கன்சர்வேடிவ் கட்சியில், ககன்மொகிந்தரா, கிளைரா கோட்டினோ, பிரீத்தி படேல், அலோக் சர்மா, சைலேஷ்வாரா, சூயல்லாபிரேவர்மன், ரிஷிசுனாக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ரிஷிசுனாக், பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தகவல் தொழில்நுட்பக் கம்பெனி நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் கட்சியில் நவேந்துமிஸ்ரா, நாடியா விட்டோம், வீரேந்திர சர்மா, தன்மான்ஜித்சிங் தேசாய், சீமா மல்கோத்ரா, பிரீத்கவுர் கில், லிசாநண்டி, வாலரிவாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.