குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று(டிச.15) நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், டெல்லியில் நேற்றிரவு பதற்றமாக காணப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருமாநிலங்களிலும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் ரயில் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் பொது சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நியூ பிரன்ட்ஸ் காலனி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில பஸ்கள் கொளுத்தப்பட்டன. இதனால், வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை விரட்டுவதற்கு போலீசா் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் என்று போலீசார் குற்றம்சாட்டினர். ஆனால், இதை அந்த பல்கலைக்கழகம் மறுத்தது. மேலும், அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, ஜனவரி 6ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
எனினும், அந்த பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று அதிரடியாக நுழைந்த போலீசார், சுமார் 150 மாணவர்களை வெளியே இழுத்து வந்தனர். இதனால், அங்கும் வன்முறை வெடித்தது. மாணவர்களும், போலீசாரும் மாறி மாறி கற்களை வீசினர். இந்த கலவரத்திற்கு பின்னர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு முற்றுகையிட்டனர். போலீசாருக்கு எதிராகவும், இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
டெல்லியில் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவகள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்தனர். வன்முறைச் சம்பவங்கள் காரணமாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், ஐடிஓ, ஐஐடி, டெல்லி கேட், பிரகதிமைதானம் உள்ளிட்ட ரயில்நிலையங்களை மூடியது. இந்த நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காமல் செல்லும் என்று அறிவித்தது.
இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது, மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், தெற்கு டெல்லியின் பல பகுதிகளில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.