உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..

State election commission appoints 27 IAS officers as observers.

by எஸ். எம். கணபதி, Dec 16, 2019, 06:49 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி தலைவர் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மட்டும் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடலாம். இதனால், அதிமுக, திமுக கூட்டணிகள் 27 மாவட்டங்களிலும் வார்டுகளை பிரித்து கொண்டுள்ளன. ஆனாலும், அதிமுக, திமுக கட்சிகளில் உள்ளூரில் செல்வாக்கு படைத்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்புள்ளது. இன்று அந்த பரபரப்புகளை காணலாம்.
இந்நிலையில், தேர்தல்களை விதிமீறல்கள் இல்லாமல் ஆளும்கட்சியினரின் அத்துமீறல்கள் இல்லாமல் நியாயமாக நடத்துவதற்காக மாவட்டம்தோறும் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு டி.எஸ்.ராஜசேகர், கோவை மாவட்டத்துக்கு ஜி.கோவிந்தராஜ், கடலூர் மாவட்டத்திற்கு சி.முனியநாதன், தருமபுரி மாவட்டத்துக்கு டி.பி.ராஜேஷ், திண்டுக்கல் மாவட்டத்துக்கு எம்.எஸ்.சண்முகம், ஈரோடு மாவட்டத்துக்கு விவேகானந்தன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாகராஜன், கரூர் மாவட்டத்துக்கு வெங்கடாசலம், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஆப்ரஹாம், மதுரை மாவட்டத்துக்க என்.சுப்பையன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாகை- தட்சிணாமூர்த்தி, நாமக்கல்- ஜெகநாதன், பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- அமிர்தஜோதி, ராமநாதபுரம்- அதுல் ஆனந்த், சேலம்- காமராஜ், சிவகங்கை- கருணாகரன், தஞ்சை- டாக்டர் அனீஸ் சேகர், தேனி- ஆசியா மரியம், நீலகிரி- ஜோதி நிர்மலாசாமி, தூத்துக்குடி- சம்பத், திருச்சி- லட்சுமி, திருப்பூர்- கஜலட்சுமி, திருவள்ளூர்- ஞானசேகரன், திருவாரூர்- கவிதா ராமு, திருவண்ணாமலை- சுந்தரவல்லி, விருதுநகர்- அமுதவல்லி ஆகியோரும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்கள் குறித்து மக்கள் இவர்களிடம் புகார் செய்யலாம். இவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகளும் நம்பலாம்.

You'r reading உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை