ரஜினியின் தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது 'சிறுவயதிலிருந் தே ரஜினியின் தீவிர ரசிகனாக இருக்கிறேன். அபோதெல்லாம் கமல்ஹாசன் பட போஸ்டர் ஒட்டினால் அதன் மீது சாணியடிப்பேன்' என்றார்.. கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் என்று பேசிய லாரன்சுக்கு கமல் ரசிகர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த ரஜினி ரசிகர்கள் மன்ற கூட்டத்திலும், 'கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது ஏற்கவில்லை. கால பைரவா படத்தில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் இல்லை என்று தெரிவித்தேன் என பேசினார். அதற்கும் எதிர்ப்பு வந்தது.
இந்நிலையில் நேற்று கமல்ஹாசனை நடிகர் லாரன்ஸ் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பு பற்றி டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
'அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹசான் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கம் அளித்தேன். இந்நிலையில் கமல் ஹாசனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியையும், அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறி உள்ளார்.