ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.. கூட்டணிகளில் பங்கீடு சிக்கல்..

Localbody election 1.65 lakh people filed nominations.

by எஸ். எம். கணபதி, Dec 15, 2019, 13:59 PM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். அதிமுக, திமுக கூட்டணிகளில் சீட் பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆளும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்ததால் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதற்கு வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களை மாநில தேர்தல் ஆணையம் சொல்லி வந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வரை வழக்குகள் சென்று, ஒரு வழியாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் முதல் கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் வரும் 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதிலும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இவற்றுக்கு வார்டு மறுவரையறைகளை முடித்து 3 மாதத்தில் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். கடந்த 9ம் தேதி முதல் நேற்று(டிச.14) வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1 லட்சத்து 15,814 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 35,464 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13,117 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,264 பேருமாக மொத்தம் 1 லட்சத்து 65,659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 17ம் தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 19ம் தேதி கடைசி நாளாகும். டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஜனவரி 6ம் தேதி பதவியேற்பார்கள்.

கிராம ஊராட்சி, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிட முடியாது. இதனால், பல கிராமங்களில் செல்வாக்கு மிக்கவர்களிடம் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளை மக்களே ஏலம் விட்டு, அந்த பணத்தை பொதுப் பணிக்கு பயன்படுத்துகிறார்கள். ஏலம் நடத்துவது சட்டவிரோதம் என்று கூறி, நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்தாலும் ரகசியமாக ஏலம் நடைபெற்று வருகிறது. இதனால், ஏராளமான கிராமங்களில் ஊராட்சி தலைவர் பதவிகள் போட்டியின்றி நிரப்பப்படும் என தெரிகிறது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடலாம். இதில் அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் அ.ம.மு.க.வும் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கூட்டணிகளில் சீட் பங்கீடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளில் தாராளமாக பணம் செலவழிக்கக் கூடியவர்களுக்கு இடங்களை திமுகவே விட்டு கொடுத்துள்ளது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ.20 லட்சம் வரை விலை பேசுகிறார்கள். கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தொகையை உறுதி செய்தால் சீட் என்று பேசப்படுகிறதாம். அந்த பணத்தில் ஒன்றிய வார்டுக்குள் வரும் அ.தி.மு.க கிளைச் செயலாளர்களுக்கு ஒரு பங்கும், அவர்களின் மூலமாக வாக்காளர்களுக்கு ஒரு தொகையுமாக பிரித்து தரப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனாலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் சீட் கிடைக்காத பலர் அதிருப்தி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் சில இடங்களில் சலசலப்பு காணப்படுகிறது. இந்த சூழலில் நாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

You'r reading ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்.. கூட்டணிகளில் பங்கீடு சிக்கல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை