சொந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும் மோடி அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோடி அரசின் நோக்கம் நன்றாக தெரிந்து விட்டது. நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும். வன்முறைகளை பரவச் செய்ய வேண்டும். மாணவர்களின் உரிமைகளை பறிக்க வேண்டும். நாட்டில் மதவேறுபாடுகளை தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் லாபம் அடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இவை எல்லாமே மோடி, அமித்ஷா ஆகியோரால் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
அசாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் பற்றி எரிகின்றன. இப்போது வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷா செல்வாரா? வங்கதேச வெளியுறவு அமைச்சர், ஜப்பான் பிரதமர் ஆகியோர் தங்களின் இந்தியப் பயணத்தை ரத்து செய்து விட்டார்கள்.
நாட்டில் அமைதி, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு சொந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. வன்முறை, பிரிவினைவாதத்திற்கு தாயாக பாஜக அரசு செயல்படுகிறது. மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விட்டு, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது. ஆட்சியில் உட்கார்ந்திருப்பவர்களே வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி, இளைஞர்களை அடித்து துன்புறுத்தினால், நாடு எப்படி சுமுகமாக செல்லும்?
இவ்வாறு சோனியா அறிக்கையில் கூறியுள்ளார்.