குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, என் ஆட்சியை கலைத்தாலும் இருந்த கருப்பு சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என்றார்.
குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்று ஒருபுறமும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பூர்வகுடி மக்களின் மொழி, இன உரிமைகள் பாதிக்கப்படுவதாக இன்னொரு புறமும் எதிர்ப்பு வலுத்துள்ளது. அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, உ.பி, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அசாம், மேற்குவங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
மேற்கு வங்கத்தில் மித்னாபூர், முர்ஷிதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பஸ்களுக்கு தீ வைப்பு, ரயில் நிலையத்திற்கு தீ வைப்பு ேபான்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மக்கள் அமைதியான வழியில் போராட வேண்டுமென்று முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மம்தா பானர்ஜியே கலவரங்களை வேண்டுமென்ற தூண்டி விடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மம்தா ஆட்சியை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று மதியம் 1 மணியளவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதி பேரணி நடத்தப்பட்டது. மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி, அம்பேத்கார் சிலையில் இருந்து துவங்கியது. ஜோராசங்கோ வரை பேரணி சென்றது. அங்கு பேரணியில் மம்தா பானர்ஜி, மத்திய அரசை கண்டித்து பேசினார்.
அவர் பேசுகையில், எந்தச் சூழ்நிலையிலும் மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம். எனது ஆட்சியை கலைத்து விடுங்கள். என்னை சிறையில் போடுங்கள். ஆனாலும் நாங்கள் இந்த கருப்பு சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம்.
குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை நடத்த விட மாட்டோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை ஒருவரை கூட நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டை பிரித்து விடும் என்றார்.