குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: போராடும் மக்களின் உரிமைகளை மதிக்க அமெரிக்கா வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Dec 17, 2019, 12:22 PM IST

இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

குடியுரிைம திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அசாம், மேற்குவங்கம் மற்றும் டெல்லியில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன.

டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து, போலீசார் அந்த பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களை கைது செய்தனர். அவர்கள் மாணவர்களை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் உரிமைகளை மதித்து பாதுகாக்க வேண்டும் என்று இந்திய அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் கவலை அளிக்கிறது. ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் உரிமைகளை மதித்து பாதுகாக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம். அதே சமயம், வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டுமென்று போராட்டக்காரர்களையும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளது.

READ MORE ABOUT :

Leave a reply