பாகிஸ்தான் மக்கள் அனைவருக்குமே குடியுரிமை தருவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் காங்கிரசுக்கு இருக்கிறதா? என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பர்கயத் பகுதியில் பாஜக பிரசாரக் கூட்டம் நேற்று(டிச.17) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களை திசைதிருப்பி வருகின்றன. காங்கிரசுக்கு துணிச்சல் இருந்தால், பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை தருவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? நாங்கள் ரத்து செய்த அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வந்து, பழைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை திருப்பி ஏற்படுத்துவோம் என்று பகிரங்கமாக காங்கிரசால் சொல்ல முடியுமா?
முஸ்லிம் பெண்களை பாதிக்கும் முத்தலாக் தடை சட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று காங்கிரசால் அறிவிக்க முடியுமா? எதிர்க்கட்சிகள், மாணவர்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்றன. பொய் பிரச்சாரங்களை செய்யும் கொரில்லா அரசியலை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை காங்கிரஸ் கட்சி சீரழிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் சதித் திட்டத்தை காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருக்குமே பாதிப்பைத் தராது. இந்தியாவில் உள்ள எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் நிச்சயம் பாதிப்பு வராது. யாரும் இ்ந்த சட்டத்தைப் பார்த்து கவலைப்பட வேண்டாம். மாணவர்கள் தங்கள் பொறுப்புகளை புரிந்து கொண்டு, காலத்தின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.