மக்களின் குரல்களை ஒடுக்கும் மோடி அரசுக்கு இரக்கமே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போரட்டத்தில் கலவரம் வெடித்தது. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். மேலும், பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கினர்.
இந்நிலையில், மாணவர்கள் மீது தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மக்கள் ஏற்காத குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் ஜனாதிபதியிடம் மனு கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று(டிச.17) மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், கபில்சிபல், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் மனோஜ் ஜா, திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், சமாஜ்வாடி தலைவர் ராம்கோபால் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் அந்த குழுவிலம் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதியிடம், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், போராட்டங்கள் குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினரிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்தும் அவர்கள் விளக்கினர். இதை கேட்ட ஜனாதிபதி ராம்நாத், தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்பு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :
மோடி அரசு இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் போது, மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கவில்லை. மக்களின் குரல்களை ஒடுக்கி சட்டத்தை அமல்படுத்திய மோடி அரசுக்கு இரக்கமே கிடையாது. தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம், இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. இது மேலும் தீவிரமடையுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்.
ஜமியா பல்கலைக்கழகத்தில் அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.