குடியுரிமை திருத்த சட்டம்: நாடு முழுவதும் சுமார் 60 சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் அமைப்புகள் போராட்டம்..

by எஸ். எம். கணபதி, Dec 19, 2019, 11:05 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று பேரணிகள் நடைபெறுகின்றன. பல நகரங்களில் மாணவர்கள் போராட்டம் நடைபெறுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, 2014ம் ஆண்டுக்கு முன்பு, அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, சமணர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

அதே சமயம், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இதன்மூலம் தங்கள் மொழி, இன உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, போராட்டங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் குடியேறியுள்ள இலங்கை அகதிகள் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கு ஏன் குடியுரிமை தரப்படவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்றும் கூறி, போராட்டங்கள் நடக்கின்றன.

நாடு முழுவதும் சுமார் 60 சமூக செயல்பாட்டு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்துகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று காலை 11.30 மணிக்கு செங்கோட்டை முதல் சாகித் பார்க் வரை பேரணி நடைபெறுகிறது. அதே போல், நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. டெல்லியில் மாண்டி ஹவுஸ் முதல் சாகித் பார்க் வரை கம்யூனிஸ்ட்களின் பேரணி நடக்கிறது.

மும்பையில் கிரந்தி மைதானத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தி திரையுலகினரும் பங்கேற்கிறார்கள். நடிகர் பர்கான் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சென்னையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.

கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பந்த் நடத்தப்படுகிறது.

You'r reading குடியுரிமை திருத்த சட்டம்: நாடு முழுவதும் சுமார் 60 சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் அமைப்புகள் போராட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை