மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அந்த அணி வந்துள்ளது. இதில், டி20 தொடரில் 2-1 என்ற வெற்றியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது, இதையடுத்து, 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகபட்டினத்தில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டாஸ் வென்ற மே.இ. அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித், ராகுல் ஜோடி நிதானமாக ஆடி நல்ல தொடக்கம் கொடுத்தனர். லோகேஷ் ராகுல் 102 ரன்களும், ரோஹித் 159 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து, கேப்டன் விராட் கோலி களமிறங்கி முதல் பந்திலேயே அவுட் ஆனார். பண்ட் 16 பந்துகளில் 39 ரன் எடுத்தார். அடுத்து, ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன் என்ற இமாலய ஸ்கோரை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது.
குல்தீப் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இந்த சாதனை புரிந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மே.இ. தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 78, நிகோலஸ் பூரன் 75 ரன் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் வென்று சமநிலை பெற்றுள்ளது.