குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில் வன்முறைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தில் அசாதீன் ஓவைசி பேசியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மஜ்லிஸ் முஸ்லிமான் கட்சி அலுவலகத்தில் இன்று(டிச.20) காலையில் ஐக்கிய முஸ்லிம் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி எம்.பி. பேசுகையில், நாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். அதே சமயம், முறையாக காவல் துறையினரிடம் அனுமதி பெற்று அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்த வேண்டும்.
லக்னோ, டெல்லியில் போலீசார் கொடுமையாக நடந்து கொண்டதையும், கலவரங்கள் நடந்ததையும் அனைவரும் அறிவோம். மங்களூருவில் 2 முஸ்லிம்கள் இறந்துள்ளனர். எனவே, அமைதி வழியில் போராட்டத்தை தொடரலாம். அதே சமயம், எங்கு வன்முறைகள் நடந்தாலும் அதை கண்டிப்பதுடன், நாம் வன்முறைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.