வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கும்.. பீதியில் ஜே.எம்.எம். மனு..

by எஸ். எம். கணபதி, Dec 23, 2019, 07:42 AM IST

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(டிச.23) காலை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்குமோ என்று ஜே.எம்.எம். கட்சி பயப்படுகிறது. இதையடுத்து, 150 ஒப்பந்த இன்ஜினியர்களை வாக்கு இயந்திரத்தை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்துள்ளது.

ஜார்க்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலான ஆளும் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிடுகிறது. அதை எதிர்த்து ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் 2 கணிப்புகள், ஜே.எம்.எம். தலைமையிலான காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா டுடே-ஆக்ஸிஸ் வெளியிட்ட கணிப்பில் ஜே.எம்.எம். கூட்டணி 38 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறது. சி வோட்டர்- ஏ.பி.பி. கணிப்பில் பாஜகவுக்கு 28 முதல் 36 இடங்களே கிடைக்கும் என்பதால் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயம், பாஜக மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறி வந்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜே.எம்.எம். கட்சிக்கு திடீர் பீதி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தலைமையில் அக்கட்சி குழுவினர் நேற்று(டிச.22) இணைத் தலைமை தேர்தல் அதிகாரி கே.என்.ஜாவை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

இதன்பின், சுப்ரியோ பட்டாச்சார்யா கூறுகையில், ஆளும் கட்சி(பாஜக) வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு அளிக்கும் இயந்திரங்களை பராமரிப்பதற்கு என்று 150 இன்ஜினியர்களை தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் எடுத்துள்ளது. இந்த இயந்திரங்களை பராமரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் இருந்து வருபவர்கள் தில்லுமுல்லு செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, அரசியல் கட்சி பிரதிநிதிகள் இல்லாத சமயத்தில் அந்த இன்ஜினியர்கள் யாரையும் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

You'r reading வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கும்.. பீதியில் ஜே.எம்.எம். மனு.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை