போலீசார் மீது கல் வீசுபவர்களை பார்த்து கேட்கிறேன்... போராட்டத்தை தூண்டிவிட்டு ஒளிந்து கொள்பவர்களை கேட்கிறேன்... மோடி உரை

by எஸ். எம். கணபதி, Dec 23, 2019, 07:31 AM IST

வன்முறைகளை நிறுத்துவதற்கு குரல் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் அதை சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று(டிச.22) பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். போலீசார் மீது கல் வீசுபவர்களை பார்த்து கேட்கிறேன்... போராட்டத்தை தூண்டிவிட்டு ஒளிந்து கொள்பவர்களை கேட்கிறேன்... தங்கள் கடமையைச் செய்யும் போலீசார் மீது கல்வீசி காயப்படுத்துவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
அவர்கள் யாருடைய விரோதிகளும் அல்ல. நாடு சுதந்திரமடைந்த பிறகு இத்தனை ஆண்டுகளில் பாதுகாப்பு பணியில் இருந்த 33 ஆயிரம் போலீசார் உயிரிழந்திருக்கிறார்கள். நாட்டில் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக பணியாற்றும் போது இத்தனை பேர் இறந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.

எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் போலீசார் யாரிடமும் உங்கள் மதம் என்னவென்று கேட்பதில்லை. மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால், நூறாண்டு கால கட்சியின் தலைவர்கள், அமைதியை வலியுறுத்தியோ, வன்முறைறை நிறுத்தச் சொல்லியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

போலீசார் மீது நடக்கும் தாக்குதலை அவர்கள் சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள். வன்முறையை அமைதியாக ஆதரிக்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டால் என் கொடும்பாவியை கொளுத்துங்கள். ஏழை மனிதர்களின் ஆட்டோரிக்ஷாக்களை கொளுத்தாதீர்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You'r reading போலீசார் மீது கல் வீசுபவர்களை பார்த்து கேட்கிறேன்... போராட்டத்தை தூண்டிவிட்டு ஒளிந்து கொள்பவர்களை கேட்கிறேன்... மோடி உரை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை