எனது அரசு எந்தவிதத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். தடுப்பு மையங்கள் அமைக்க மாட்டோம் என்று முஸ்லிம் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் போராடுகின்றன.
இந்த சட்டத்தை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அதன்மூலம், பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் முஸ்லிம்களை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாக அந்த சமூகத்தினரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன. இதற்கிடையே, என்.ஆர்.சி கொண்டு வரப்பட்டதும், குடியுரிமை பெற முடியாதவர்களை வைப்பதற்காக தடுப்பு முகாம்கள் அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதமே அறிவுறுத்தியிருக்கிறது.
இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட எதிர்க்கட்சி முதல்வர்கள், என்.ஆர்.சி. சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி உள்ளிட்டோரும் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த முடியாதென கூறியுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் உத்தவ் தாக்கரே, எனது அரசு முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் அநீதி ஏற்படுத்த விடாது என்று உறுதியளிக்கிறேன். நாங்கள் அந்த சமுதாய இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி, இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டுமென்ற அப்துல்கலாமின் கனவை நனவாக்குவோம்.
தடுப்பு மையங்கள் குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. அவை வெளிநாட்டு அகதிகளுக்காக மட்டுமே அமைக்கப்பட வேண்டும். ஆனாலும், மகாராஷ்டிராவில் அந்த மையங்களை அமைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இது குறித்து சமாஜ்வாடி மாநில தலைவர் அபுஆஸ்மி கூறுகையில், கடந்த கால பாஜக அரசு போல் இல்லாமல் இப்போது முஸ்லிம்களுக்கு உத்தவ் அளித்துள்ள உறுதிமொழியால் மிகப் பெரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது என்றார்.