இன்று காலை 8.08 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதை வெறுங்கண்ணில் பார்த்தால், விழித்திரை பாதிக்கப்படும் என்பதால் விசேஷ கண்ணாடி அணிந்து தான் பார்க்கலாம்.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியனை சுற்றி வரும் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரியன் மறைகிறது. இப்படி சூரியன் மறையும் நேரம்தான் சூரிய கிரகணம்.
இதில், சூரியன் முழுமையாக மறையாமல், நடுப்பகுதி மட்டும் மறைந்து சூரியனை சுற்றி ஒரு சிவப்பு வட்டம் தோன்றும். இதை வளைய சூரிய கிரகணம் என்பார்கள்.
இன்று அந்த சூரியகிரகணம்தான் ஏற்படுகிறது. இது தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பல இடங்களில் நன்றாக தெரியம். இந்த சூரியகிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கக் கூடாது. காரணம், சூரிய ஒளி நமது விழித்திரையில் ஊடுருவி பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, சூரிய ஒளியைக் கட்டுப்படுத்தும் கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போது எதையும் சாப்பிடக் கூடாது என்றும், பிரார்த்தனை செய்வது சிறப்பு என்றும் இந்து மதத்தினர் கூறுகிறார்கள். சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நேற்றிரவே நடைசாத்தப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இதே போல், பெரும்பாலான கோயில்களில் நடைசாத்தப்பட்டுள்ளது. சூரியகிரகணம் 21 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தோன்றுகிறது.