ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ஜார்கண்டில் கடைசியாக முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிட்டது. அதை எதிர்த்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தேர்தல் முடிவில் ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலுமாக இந்த கூட்டணி 47 தொகுதிகளை வென்றன. மெஜாரிட்டிக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், 47 இடங்களை வென்றதால் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைகிறது.
ஹேமந்த் சோரன், கவர்னர் திரவுபதி முர்முவை சந்தித்து தனக்கு கூட்டணியின் 47 எம்.எல்.ஏ.க்களுடன், ஜே.வி.பி. கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் சேர்ந்து 50 பேரின் ஆதரவு உள்ளதாக கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்று, முதல்வராக பதவியேற்க வருமாறு ஹேமந்த் சோரனுக்கு கவர்னர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, வரும் 29ம் தேதியன்று பகல் 1 மணியளவில் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார்.
இந்நிலையில், அவர் நேற்று மாலை டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து தனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர், பதவியேற்பு விழாவுக்கு வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, ராகுல்காந்தியையும் அவர் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதே போல், பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் ஆகியோரையும் அவர் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவுள்ளார்.