உத்தரபிரதேசத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கருதப்படும் 130 பேரிடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. மீரட் உள்பட சில இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் 19 பேர் வரை உயிரிழந்தனர். ஏராளமான போலீஸ், அரசு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
தற்போது அங்கு மாமூல் நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இழப்பீடு கேட்பதற்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாநில அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, ரூ.50 லட்சம் வரை மதிப்புடைய பொதுச் சொத்துக்களின் சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு இழப்பீடு கேட்டு, 130 பேருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராம்பூர் மாவட்டத்தில் 28 பேருக்கும், சம்பல் மாவட்டத்தில் 26 பேருக்கும், பிஜ்னோர் மாவட்டத்தில் 43 பேருக்கும், கோரக்பூர் மாவட்டத்தில் 33 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வன்முறை நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வன்முறைகளில் ஈடுபட்ட இவர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், இவர்கள் இழப்பீடு செலுத்தாவிட்டால், இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.