போலீஸ் என் கழுத்தை பிடித்து தள்ளி விட்டது.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

by எஸ். எம். கணபதி, Dec 29, 2019, 09:23 AM IST

உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் மீரட் உள்ளிட்ட பல ஊர்களில் கலவரம் வெடித்தது. இதில் 19 பேர் பலியாயினர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து கடுமையாக சாடி வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று வருகிறார். இந்நிலையில், பிரியங்கா காந்தி இன்று லக்னோவுக்கு காரில் சென்றார். போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரிடம் பேசுவதற்காக பிரியங்கா காந்தி சென்றார்.

ஆனால், போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தினர். அவரை அங்கு செல்லக் கூடாது என்று தடுத்தனர். ஆனால், பிரியங்கா காந்தி காரை விட்டு இறங்கி, கட்சிக்காரர் ஒருவரின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றார். போலீசார் அந்த ஸ்கூட்டரையும் போக விடாமல் தடுத்தனர். இதைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி நடந்தே சென்றார். அப்போது பெண் போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்து கையைப் பிடித்து இழுத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், பிரியங்கா காந்தி தொடர்ந்து சென்று அந்த குடும்பத்தினரை சந்தித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பிரியங்கா காந்தி கூறுகையில், என்னை போலீசார் தடுத்து நிறுத்தினர். நான் நடந்து செல்லும் போது கூட பெண் போலீஸ்காரர் ஒருவர் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளினார். கையைப் பிடித்து இழுத்து பலவந்தமாக தள்ளினார்.. என்று குற்றம்சாட்டினார்.


More India News