பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட மறுப்பவர்கள் இந்த நாட்டில் வசிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பாஜக மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) 54வது ஆண்டு தினவிழா நடைபெற்றது. இதில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவை தர்ம சத்திரமாக மாற்ற வேண்டுமா? யார் வேண்டுமானாலும் இந்த நாட்டுக்குள் நுழைந்து வாழலாம் என்று சொல்வதற்கு இது என்ன தர்ம சத்திரமா? குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களை நாம் சவாலாக எடுத்து கொள்ள வேண்டும். அதற்கு ஏ.பி.வி.பி சங்கம் போன்றவை பயன்பட வேண்டும்.
இந்த நாட்டில் வாழ வேண்டுமானால், பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்ப வேண்டும். அப்படி முழக்கமிடுபவர்கள் மட்டுமே இந்த நாட்டில் இருக்கலாம்.
உலகில் எந்த நாட்டிலாவது குடியுரிமை சட்டம் இல்லாமல் இருக்கிறதா? எல்லா நாட்டிலும் இருக்கிறது. பகத்சிங், நேதாஜி போன்றவர்கள் தியாகங்களை நாம் மதிக்க வேண்டாமா? இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.