ஜார்கண்டில் ஹேமந்த்சோரன் முதல்வராக பதவியேற்பு.. ராகுல், மம்தா, ஸ்டாலின் பங்கேற்பு

by எஸ். எம். கணபதி, Dec 29, 2019, 17:28 PM IST

ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜார்கண்டில் சட்டசபை பொது தேர்தல் கடந்த நவ.30ம் தேதி தொடங்கி, டிச.20ம் தேதி வரை 5 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16, ஆர்.ஜே.டி. 1 என்று 47 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்கண்டின் 11வது முதல்வராக இன்று பகல் 2 மணியளவில் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் முன்னாள் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம்ஆத்மி சஞ்சய்சிங் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றவுடன், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரான், ஆர்ஜேடி கட்சியைச் சேர்ந்த சத்யானந்த் போக்டா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

READ MORE ABOUT :

More India News