ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த பகுதிகளில் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இது வரை நடத்தப்படவில்லை. தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் பல்வேறு காரணங்கள், வழக்குகளுக்கு பிறகு தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிலும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது.
இதன்படி, 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், முதல் கட்ட வாக்குப் பதிவு டிச.27ல் நடைபெற்றது. இதில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 45 ஆயிரத்து 330 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை(டிச.30) நடைபெற உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாளை நடைபெற உள்ள 2-ம் கட்ட தேர்தலுக்கு 158 ஊராட்சி ஒன்றியங்களில், 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில், காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக 61 ஆயிரம் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 1,551 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் ஜனவரி 2ம் தேதியன்று 315 மையங்களில் எண்ணப்பட உள்ளது.