குடியுரிமை திருத்த சட்டம்.. மாநில அரசுகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை

Jan 2, 2020, 08:58 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 5 ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

RaviSankarPrasad

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் இச்சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேற்குவங்கம், சட்டீஸ்கர் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளன.


இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று(ஜன.1) கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கடமையாகும். மத்தியப் பட்டியலில் உள்ள குடியுரிமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 245(2)வது பிரிவின்படி, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை மாநில அரசுகள் எதிர்க்க முடியாது.


அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்று பதவியேற்ற முதலமைச்சர்கள், அதற்கு எதிராக பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
இவ்வாறு ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தார்.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை