பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.இதையடுத்து, இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசினார் என கூறி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயாசங்கர், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதரிடம் புகார் கொடுத்தார். அதே போல், பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் போலீசில் புகார் கொடுத்தார். அதில், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொல்லத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, திருநெல்வேலி மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது இபிகோ 504, 505(2), 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அவரை கைது செய்ய வேண்டுமென்று கோரி நெல்லையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கிடையே, நெல்லை கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நெல்லையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதை பாஜகவினர் தடுத்தனர். அதன்பின், மருத்துவமனைக்குள் சென்று அவரை வெளியேற்ற முயன்றனர்.
இதன்பின், நெல்லை கண்ணன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் தலைமையில் பாஜகவினர் நேற்று(ஜன.1) சென்னை கடற்கரையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நேற்றிரவு பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கு திரண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், அவரை கைது செய்ததை கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டார்.