எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காவல்துறை பொறுப்பு எங்கே போனது? எஸ்டிபிஐ எழுப்பும் கேள்வி

Share Tweet Whatsapp

நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும், கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்? என்று எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்பியுள்ளது.


எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நெல்லையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய நெல்லை கண்ணன், பாஜகவின் அழுத்தத்தாலும், நிர்ப்பந்தத்தாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.


நெல்லை கண்ணன் வயது முதிர்ந்தவர். பெரும் தமிழ் இலக்கியவாதி. நீண்ட காலம் தமிழுக்கு தொண்டாற்றியவர். நெல்லை மாநாட்டில் அவர் பேசிய பேச்சு உள்நோக்கத்தோடு பேசியவையல்ல. மாறாக. பாஜக அரசின் வெறுப்பு அரசியல், மக்கள் விரோத செயல்பாடுகளால் விரக்தியும், கோபமும் கொண்ட அவரின் அறச்சீற்றமே அந்தப் பேச்சு.


அதற்கு உள்நோக்கம் கற்பித்து CAAவிற்கு எதிரான மக்களின் கோபத்தை திசை திருப்பப் பார்க்கிறது பாரதிய ஜனதா. எனவேதான். நெல்லை கண்ணனுக்கு எதிரான இந்தப்போராட்டம்.மற்ற அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு மெரினாவில் போராட அனுமதிக்காமல் நெருக்கடி கொடுக்கும் தமிழக காவல்துறை இன்று பாஜகவினருக்கு போராட அனுமதித்தது ஏன்?


எச்.ராஜா உட்பட பாஜகவின் பல்வேறு தலைவர்களின் மீது வெறுப்பு மற்றும் வன்முறைப்பேச்சு சம்பந்தமாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, நெல்லை கண்ணன் மீது மட்டும் இவ்வளவு துரிதகதியில் கைது நடவடிக்கை எடுத்தது ஏன்? கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது ஏன்?
பாஜக மீது பயமா? பாசமா? நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும் கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்?


காவல்துறையின் ஒருதலைப்பட்சமான, பாஜகவுக்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது. நெல்லை கண்ணன் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும்.
நெல்லை கண்ணனுக்கு துணை நிற்போம்! அவருக்காக குரல் கொடுப்போம்!
இவ்வாறு தெகலான் பாகவி கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

Leave a reply