வங்கதேசத்தில் நடந்த போலீஸ் தாக்குதல் வீடியோவை வெளியிட்டு, உ.பி.யில் நடந்ததாக குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதன்பிறகு அவசரமாக அதை நீக்கினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை கிளப்பி, ஐ.நா. வரை முட்டி மோதிப் பார்த்தும் எதுவும் செய்ய முடியவில்லை. அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச நாடுகள் ஒதுங்கி விட்டன.
ஆனாலும், இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை வைத்து உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் அடிக்கடி முயற்சிக்கிறது. இந்நிலையில், இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டும் காட்சிகளை கொண்ட அந்த வீடியோவை, உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது உ.பி. போலீசார் தாக்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்த வீடியோ கடந்த 2013ம் ஆண்டில் வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில் வங்கதேசத்து அதிரடிப்படையினர் என்பதை காட்டும் அடையாளங்கள் இருக்கின்றன. இது தெரிந்ததும் இம்ரான்கான் அந்த பதிவை அவசரமாக நீக்கினார்.இதற்கிடையே, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ்குமார் ஆகியோர் இம்ரான்கானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.